Saturday, May 30, 2015

திருநெல்வேலி,கிருஷ்ணாபுரம் ஸ்ரீ வேங்கடாஜலபதி திருக்கோவில் சிற்பங்கள் : முனைவர் சௌந்தர மகாதேவன்



உளியின் மொழியில் கற்கவிதைகள்.
...................................................................................
முனைவர் சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி
9952140275.
mahabarathi1974@gmail.com
திருநெல்வேலி,கிருஷ்ணாபுரம் ஸ்ரீ வேங்கடாஜலபதி திருக்கோவில் சிற்பங்கள்















..........................................................................................................................................................................
சில நிமிடங்கள் சிலிர்க்கும் நிமிடங்களாய் அமைந்து விடுகின்றன
 
வண்ணத்துப்பூச்சி வாசல் தொட்டிச்செடியில் அமரும் அழகுவினாடியைபோல்.திருச்செந்தூர் செல்லும்போதெல்லாம் ஸ்ரீராம் பாப்புலர் பேருந்து கிருஷ்ணாபுரம் கோவில் ஆர்ச் தாண்டி நிற்பதும்,ஒவ்வொரு முறையும் உள்ளேபோய் உலகப்புகழ்மிக்க சிற்பங்களைப் பார்த்துவிடவேண்டும் என்று மனம் நினைப்பதும்,அந்த வினாடியோடு மறந்துபோவதும் வழக்கமான நிகழ்வுகள்.


கோடை விடுமுறைக்காகக் கல்லூரி விடுமுறை விடப்பட்ட அந்த தளர்வான நாளின் மாலை வேளையில் என் குழந்தைகளுடன் கிருஷ்ணாபுரத்திலிருந்தேன்.

மிகப் பரந்த வளாகம்.பாளையங்கோட்டையிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் திருநெல்வேலி திருச்செந்தூர் நெடுஞ்சாலை ஓரத்தில் கம்பீரமாய் வீற்றிருக்கிறது வெங்கடாசலபதி திருக்கோவில்.


கொடிமரம் தாண்டி உள்நுழைகிறேன்..

உளியின் மொழியில் எழுதப்பட்ட கற் கவிதைகள்.

காலம்கடந்தும் நம் காதோடு வரலாறு பேசிக்கொண்டிருகின்றன.

குழந்தைகளோடு சிற்பங்கள் பார்ப்பதற்குக் கொடுத்துவைத்திருக்க வேண்டும்.சோட்டா பீம் பார்த்தே பழக்கப்பட்ட அச் சிறுவர்கள் அங்கு அர்ஜுனனையும் கர்ணனையும் கூர்மையான தாடியோடு நிற்கும் உயிர் சிற்பங்களையும் கண்டு மகிழ்ந்தனர்.

எத்தனையோ ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் உயிர்த்துடிப்போடு செதுக்கப்பட்ட அந்தச் சிற்பங்களின் அழகை கூகிள் தேடுபொறிகளில் தேடித்தெரிந்துகொண்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தேடிவந்து கொண்டிருக்க நாம் சர்க்கரைப்பொங்கல் தின்று அச் சிற்பங்கள் மீது பூசிக்கொண்டிருக்கிறோம் என்பது கொடுமையானதில்லையா ? 


பிரெஞ்சு தாடி என்று சொல்கிறோமே அதைப்போன்ற வேறுபட்ட தாடியோடுடன் கூடிய சிற்பத்தைக் கண்டு என் மகன்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தமிழ்நாட்டில் வேறுஎந்தக் கோவிலிலும் பார்க்க இயலாத அந்தச் சிற்பம் முகஅமைப்பில் வேற்பட்டதாய் இருக்கிறது .

.சீனமுகச் சாயலில் ஒரு சிற்பம்,அரசகுமாரியைத் தூக்கிச் செல்லும் இளைஞன் சிற்பத்தில் தத்ரூபம்..

இளவரசியின் முகத்தில் பதற்றத்தை அந்தச்சிற்பி அந்தச் சிற்பத்தில் வடித்திருந்தான்.

பதினாறாம் நூற்றாண்டுச் சிற்பங்கள் அவை.
இந்தக் கோவிலின் வீரப்பநாயக்கர் மண்டபம்,கோவிலின் அரங்கமண்டபம் ஆகிய மண்டபங்களில் ஆறடி உயரத்திலமைந்த அருமையான முப்பதிற்கும் மேற்பட்ட அழகுச் சிற்பங்கள்..


ஒரே தூணில் நான்கு திசைகளிலும் அழகான சிற்பங்கள்.குறத்தி அரசகுமாரனைக் கடத்தும் சிற்பம் மனதை மயக்குகிறது.

மகாபாரதப் பாத்திரங்களான அர்ஜுனனையும் கர்ணனையும் கண்ணெதிரே காண முடிகிறது.இளவரசியைக் கடத்தும் இளம்வீரன் மீசையும்,நாயக்கமன்னர்களின் வளைத்த கொண்டையும் காலக்குறியீடாய் கல்லில் பதிந்துகிடக்கின்றன.

உடைவாள்,காலில் கழல்,கூர்மையான மூக்கு ஆகியன சிற்பியின் ஆளுமைக்குச் சான்றாக அமைகின்றன.


குறத்தி ராஜகுமாரனைக் கடத்தும் சிற்பத்தில் நளினம் தெரிகிறது.
 
பெண்ணின் வலிமையின்முன் சிறுதுரும்பாய் ராஜகுமாரனை அச்சிற்பி படைத்துக் காட்டுகிறார்.

அர்ஜுனனின் தவக்கோலச் சிற்பம் அக்காலத்திற்கு நமை இட்டுச்செல்கிறது.

வளைந்து நெளிந்து கர்ணனின் மீசை வீரம் காட்டுகிறது.மூக்கின் கூர்மையும் கண்களின் கூர்மையும் நமை வியக்க வைக்கிறது.

முகத்திற்கு முகம் மீசை அமைப்பு மாறுவது சிறப்பு.மன்மதனும் ரதியும் எதிரெதிரே கல்லிலும் காதல் மொழி பேசிக்கொண்டிருகின்றனர்.


மன்மதன் கரும்புவில்லின் மேற்பகுதியில் உள்ள சிறுதுளையில் ஊசியைப் போட்டால் அக்கரும்புவில்லின் கீழ்ப்பகுதியில் உள்ள சிறுதுளையில் எடுத்துவிடலாம்..அந்த அளவு நுண்கலை சிறந்து நிற்கிறது.


ஓவியர் சில்பி ,கிருஷ்ணபுரச்சிற்பங்களில் மனம் மயங்கி வரைந்த ஓவியங்கள் விகடன் வெளியிட்டுள்ள தென்னாட்டுச் செல்வங்கள் எனும் ஓவியத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.


திக்கெலாம் புகழுறும் திருநெல்வேலி என்று திருஞானசம்பந்தர் போற்றிப்பாடிய திருநெல்வேலி கிருஷ்ணாபுரம் திருவேங்கடநாதர் திருக்கோவில் கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற உள்ளது.


ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆலயங்களின் சிற்பங்களைப் பாதுகாத்து அடுத்ததலைமுறைக்குத் தரும் நற்பணியைச் செய்ய வேண்டும்.


படங்கள்,கட்டுரை: முனைவர் சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி

புதுமைப்பித்தன் என்கிற காலத்தச்சன்: முனைவர் சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி



புதுமைப்பித்தன் பிறந்ததினம்: ஏப்ரல் 25
             புதுமைப்பித்தன் என்கிற காலத்தச்சன்
.................................................................................................................................................................
·         முனைவர் சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி
·         mahabarathi1974@gmail.com,9952140275
மனம் எனும் வெளியில் தினம் அலைகிற மனிதன் கலைக் கண்கள் பெற்றிருந்தால் அவன் தன்னைப் பாதிக்கிற யாவற்றையும் படைப்பாகப் பதிவுசெய்வான்.

பொசுக்கி எரிக்கிற சமூகஅவலத்தை அங்கதநடையில் பதிவுசெய்து எள்ளிநகையாடியவர் சொ.விருத்தாசலம் என்கிற இயற்பெயர் கொண்ட புதுமைப்பித்தன் (1908-1948). 

புதிதாய் எழுதத் தொடங்குகிற எழுத்தாளர்கள் அனைவருக்கும் அவரே ஆத்மகுரு. சுடலைத் தீ கக்க பஸ்பமாவதற்காகச் சதை பொசுங்கி நிண நாற்றம் வீசிக்கொண்டிருக்கும் திருநெல்வேலி வெள்ளக்கோவில் சுடுகாட்டில் மருதாயிப் பாட்டிக்கு முன் எமனைக் கொண்டுநிறுத்தி “காலனும் கிழவியும்” என்று எள்ளிநகையாடியவர்.

 பத்திரிகையாளனாய் வாழ்வைத் தொடங்கி வாழ்வின் போலித்தனமான முகங்களின் குரூரமுகமூடிகளைக் காணச் சகியாமல் அவர்களைப் படைப்புகளாக மாற்றித் தன் படைப்பு வெளியில் உலவவிட்டு ஆறுதலடைந்தவர்.

கடவுளைக் கந்தசாமிப் பிள்ளை வீட்டில் கொண்டுவந்துவிட்டு அவரோடு காபிகடைக்கும் கடவுளை அனுப்பிப் பகடிசெய்தவர்.

திருநெல்வேலியும் சென்னையும் இவரது படைப்புக்களங்கள்.மணிக்கொடி இவரது எழுத்தாற்றலுக்குத் தொடக்கத்தில் களம்அமைத்துத் தந்தது.


இலக்கியத்தைப் புனிதமாகப் பார்த்த பார்வைக்கு மாறுபட்டவர்.வேதாந்திகளின் கைக்குச் சிக்காத கடவுள்மாதிரி எதற்குள்ளும் அவர்கதைகளை அடக்கவோ அளக்கவோ இயலாக் கதைகளாகத் திகழ்கின்றன. 

  அழுகிய மலர்களுக்கருகிலும் அயராது தேன்குடித்துக்கொண்டிருகிற வண்ணத்துப்பூச்சிகளாய் அவர் பாத்திரங்கள் சோகத்துக்கருகிலும் இயல்பு மாறாமல் சொர்க்கசுகத்தைக் கொண்டாடுவனவாகவே திகழ்கின்றன.

ஸ்டோர் குமாஸ்தா ராமன்,பால்வண்ணம்பிள்ளை,எப்போதும் எங்கும் பேரம்பேசும் பிரமநாயகம் போன்றோர் அவர்களுள் சிலர். நூறுக்கும் மேற்பட்ட கதைகளைத் தந்த புதுமைப்பித்தன் அங்கதக் கவிதைகளும் எழுதியுள்ளார். 

“கற்பு கற்பு என்று கதைக்கிறார்களே! இதுதான் ஐயா பொன்னகரம் “ என்று பொன்னகரம் கதையில் அவர் எழுதியதைப் படிக்கும்போது அவர் ரணவரிகளை உணரமுடிகிறது.

ஓடும்நதியில் உருண்டு செல்கிற நீர்க்குமிழி சட்டென்று உடைந்து நதியோடு சங்கமமாவதைப் போல் அவர் முன்னிறுத்துகிற ஆதங்கங்கள் கதைவெளிக்குள் காணமல் போகிற வித்தை நடக்கிறது.

அவர் தீர்வுசொல்கிற தீர்க்கத்தரிசி இல்லை.எந்த வரையறைக்குள்ளும் அவரை நாம் எளிதாக அடக்கிவிட முடியாது.

ஊரின் எல்லைக் கல்லைப்போல ஒதுங்கிநின்று சிரித்துக்கொண்டிருக்கும் அங்கதக் கல் அவர்.குழைந்து நடக்கிற குழந்தையின் காலடித் தடம்போன்ற மென்மையை அவர் கதைகள் முன்மொழிவதில்லை.

கொத்துப்பூவைக் குனிந்து முகர்கிற நாசியைப்போல் அவர் கதைகள் வாசகனை மயக்கத்தில் ஆழ்த்துகின்றன.

காஞ்சனை தந்த எதிர்பார்ப்பில் வாசகன் இன்னும் மீளவில்லை.ஐம்பதுக்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்புக் கதைகளைத் தந்துள்ளார்.

வாணிதாஸபுரத்தை பூலோக சுவர்க்கமாய் வர்ணித்து அவர் எழுதியுள்ள கலியாணி கதை அழகான கதை. “ கள்ளிப்பட்டியானால் என்ன? நாகரிக விலாசமிகுந்தோங்கும் கைலாசபுரமானால் என்ன? கங்கையின் வெள்ளம்போல, காலம் என்ற ஜீவநதி இடைவிடாமல் ஓடிக்கொண்டேயிருக்கிறது.. ஓடிக்கொண்டேயிருக்கும். தயிர்க்காரி சுவரில் புள்ளி போடுகிறமாதிரி,நாமாகக் கற்பனை பண்ணிச் சொல்லிக்கொள்ளும் ஞாயிறு திங்கள்,செவ்வாய்க்கிழமைகள் எல்லாம் அடிப்படையில் ஒன்றுதானே.” என்று கயற்றரவு கதையை அவர் தொடங்கும் உத்தி அலாதியானது.

 நாகரிகத்தின் உச்சியைக் காண வேண்டுமென்றால் ஒரு நகரத்தை இரவில் காணவேண்டும் என்று கவந்தனும் காமனும் கதையில் சொல்வார் புதுமைப்பித்தன்.

அவர் கதைகளில் கட்டில் பேசும்.சுடுகாடும் மணம் வீசும்.

களங்கத்தோடு பெண்ணாக வாழ்வதைவிட கல்லாகக் கிடக்க அவர் அகலிகை விரும்புவாள்.

அவர் மனநிழல் விஸ்வரூபம் எடுக்கும்.அவருக்கு நகரைப் பிடிக்காது, எப்போதும் நகரப்பிடிக்கும்.அவர் காலத்தில் வாழ்ந்த லக்ஷ்மிகாந்தங்களை “நானே கொன்றேன்” கதையாகத் துணிச்சலாக  அவரால் எழுத முடிந்தது.

புதுமைப்பித்தன் கதைகள் சமுதாயத்தின் சாளரங்களாகத் திகழ்கின்றன.ஊதுகிற பலூன் சட்டென்று உடைந்துவிட்ட அதிர்ச்சிதாங்க முடியாமல் அதிர்கிற குழந்தைகளாகிறோம் அவர் கதைவெளிக்குள் நாமும்.

இயந்திரமாந்தர்களை அவர் கதைகள் எள்ளி நகையாடுகின்றன. அவர் படைப்பு வெளியில் நடிப்பில்லை.அவர் கதைகள் நிகழ்வுகளின் நிகழ்கால நிஜங்கள்.


Tuesday, May 5, 2015

எழுத்தாளர் சுஜாதா : அறிவியல் புனைவின் ஆசான் * சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி




·       
கூர்மையான மொழிநடையால் பாமரவாசகனையும் எளிதாக எட்டியவர்.
 
பனிச்சறுக்கில் வழுக்கிச்செல்லும் லாவகம் அவரது சுருக்கமான உரைநடைக்கு உண்டு.
அம்பலம் எனும் இணையப் பெருவெளியில் இறங்கி அவர் எழுதிய பத்திகளும்,அறிவியல் புனைவுகளும் இன்றும் புதுமையானதாகவே வாசகனுக்குக் காட்சி தருகின்றன.

அவரது பாதிப்பால் வாசகர்களாய் இருந்தவர்கள் தமிழில் வலைப்பூப் படைப்பாளிகளாக உருவாயினர். 
சிறுபத்திரிகைகளை வெகுசன வாசகர்களிடம் கொண்டுசென்ற பெருமை அவருக்கு உண்டு. 
குறுந்தொகைப் பாடல்களைப் புதுக்கவிதைகளாக்கி அவர்செய்த முயற்சிகள் புதுமையானவை.

 ‘ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்’ நூல் திவ்யசூரி சரித்திரத்தையும் பெரியவாச்சான்பிள்ளையையும் பாமரவாசகன் வரை கொண்டுசென்றது. 

மரபணுகளைப் பற்றியும் கணினி பற்றியும் அவரளவுக்கு எளிமையாகச் சொன்னவர்கள் யாருமில்லை என்று சொல்லுமளவு அறிவியல் தமிழ் முயற்சிகளுக்கு அச்சாகத் திகழ்ந்தவர்.

 அவர் எழுதிய ஸ்ரீரங்கத்துத் தேவதைகள் போன்ற சிறுகதைகளின் கருவும் உருவும் புதியன.

 கணையாழியின் கடைசிப்பக்கங்கள் தீவிரஇலக்கியதிற்கும் வெகுசன இலக்கியத்திற்கும் பாலம்.


அவரால் அடையாளம் காட்டப்பட்ட இளைஞர்கள் இன்று தமிழ்இலக்கியத்தில் புதியஇலக்கியவகைகளின் முன்னோடிகளாகத் திகழ்கிறார்கள்.
·         இப்படிக்கு இவர்கள்,தி இந்து