Friday, March 20, 2015

"நகுலன் "எனும் உயிர்க்கவிதை




முனைவர் சௌந்தர மகாதேவன்,தமிழ்த்துறைத்தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி,திருநெல்வேலி, 9952140275

நூறு முறையாவது படித்திருப்பேன் நகுலன் கவிதைகளை..ஒரு மூச்சுக்கும் அடுத்த மூச்சுக்கும் இடைப்பட்ட காலம்தான் மனிதஆயுள் என்று புத்தர் சொன்னதுபோல் நகுலனும் சொல்கிராறோ என்று நினைக்கத் தோன்றும்.வாழ்வைத் தத்துவ நோக்கோடு பார்த்தவர்கள் நகுலனும் மௌனியும்..இருவரும் சுருக்கமாக ஆனால் சுருக்கென்று தைக்க எழுதியவர்கள்.
கனமான அரிசி மூட்டையை லாவகமாகக் கொக்கியால் குத்தித்தூக்கி முதுகில் ஏற்றி இடம் மாற்றும் தொழிலாளியின் நேர்த்தியான லாவகம் நகுலன் கவிதைகளில் உண்டு.
அவர் கவிதையின் கனம் வாசிக்கும் வாசகனின் மனதில் இடம்மாறி மனதை ஒரு வினாடியில் பாராமாக்கும்.இறந்துபோன வண்ணத்துப்பூச்சியை இரக்கமில்லாமல் இழுத்துச் செல்கிற எறும்பைப்போல் காலம் நம்மை இழுத்துச்செல்லும் கோலத்தை நகுலன் கவிதைகள் அப்பட்டமாய் சொல்கின்றன.
 நகுலனின் வரிகளில் சொல்லவேண்டுமானால்
“திரும்பிப் பார்க்கையில்
காலம் ஓர் இடமாகக் காட்சி அளிக்கிறது.”

காலத்தை ஓர் இடமாக உருவகம் செய்கின்றன நகுலன் கவிதைகள்.
சொல் விளையாட்டுக்களற்ற,தெளிவான கவிதைகளை நகுலன் தந்திருக்கிறார்.
கும்பகோணம் வெற்றிலை,பாக்கு,சுண்ணாம்பு டப்பா,புகையிலை,பக்கத்தில் சாம்பல் கிண்ணம்,சிகரெட்,வத்திப்பெட்டி, பேசுவதற்கு நண்பர்கள் இவைபோதும் என்று நினைத்தவர் நகுலன். “காலா என் காலருகில் வாடா“ என்று எமனை எதிர்கொண்டழைத்த மகாகவி பாரதியைப் போல் நகுலனும் “இந்தச் சாவிலும் சுகமுண்டு” என்று சாவைக் கொண்டாடியவர்.
நகுலனின் உலகம் நாம் வாழும் உலகிலிருந்து வேறுபட்டது.அவருக்கு முகத்திரைகளும் மேம்போக்கான முகமன் உரைகளும் அவசியமற்றதாய் இருந்தது.தன்னை அவனாக்கும் சித்துவிளையாட்டு தெரிந்திருந்தது.
அவரது கவிதைக்கு ஒரு பொருள் இல்லை,அவற்றை எந்தச்  சிமிழுக்குள்ளும் எந்த விமர்சகனாலும் அடக்கமுடியாது.அவை அவரைப் போல் சுதந்திரவெளியில் இன்னும் இருப்பது பெருஞ்சிறப்பு.எத்தனைமுறை வாசித்தாலும் சலிப்புத்தட்டாது,ஒவ்வொரு முறையும் வேறுவேறு வாசிப்பனுபவத்தைத் தந்துகொண்டே இருக்கும்.
அகம் குறித்த தேடல் நகுலன் கவிதைகளின் கரு.
மனிதர்களின் தீரா ரணமாயிருக்கும் மரணம் அவருக்கு வேடிக்கை.பழைய நினைவுகளின் பள்ளத்தில் அவர் கவிதைகள் ஆழம் தேடுகின்றன.கிணற்றுக்குள் தவறி விழுந்த இரும்புவாளியைப் பலகொக்கிகள் கொண்ட பாதாளக்கரண்டி அமிழ்ந்து தேடுவதைப்போல் அவர் மனமெனும் கிணற்றுக்குள் கவிதையெனும் பாதாளக்கரண்டியால் ஆழமாய் தேடுகிறார்.சில கவிதைகளைப் புரிந்துகொள்ள நமக்குப் பல நாட்கள் தேவைப்படுகிறது.
“எனக்கு
யாருமில்லை
நான்
கூட.. “
என்ற கவிதையைப் புரிந்துகொள்ள நெடுநேரம் தேவைப்படுகிறது.
நகுலன் நகுலன் சாயலில் மட்டுமே கவிதைகள் எழுதினார்.அவர் முகமே அவருக்குப் போதுமானதாய் இருந்தது.எல்லாம் விளம்பரமயமானதாய் நகுலன் நினைத்தார்.
இறப்புவீடு கூடக் கேமராக்களும்,விளம்பரச் சுவரொட்டிகளாலும்,மலர்வளைய மரியாதைகள்,பேட்டிகள்,இரங்கல் கூட்டங்கள் என்று  சந்தை இரைச்சலாய் மாறியதை அவரால் சகிக்கமுடியவில்லை.
“செத்த வீட்டில்
துக்கம் விசாரிக்கச்
சென்று திரும்பியவர்
சொன்னார்
செத்த வீடாகத்
தெரியவில்லை
ஒரே சந்தை இரைச்சல்”துக்கம் விசாரிக்கச் சென்று துக்கத்தோடு திரும்பியவர் நகுலன்தான்.
மனிதனைத் தவிர வேறுஎந்த விலங்கும் பறவையும் தன் இயல்பை இழக்கவில்லை என்ற எண்ணம் நகுலனுக்கு இருந்தது.
திருவனந்தபுரத்தில் அவர் வசித்த வீட்டிற்கு வந்த நண்பரிடம் நகுலன்,” நான் இறந்தபின்பு தயவுசெய்து யாரும் இரங்கல்கூட்டம் நடத்த வேண்டாம்,ஏனெனில் அக்கூட்டத்திற்கு என்னால் வரஇயலாது”என்று சொன்னாராம்.அவ்வளவு வெறுப்பு இச்சமுதாயத்தின் போலித்தனமான வறட்டுத்தனமான சடங்குகளில்.
கவிதையை வாசகன் புரிதுகொள்ள அக்கவிஞனின் சொற்களே தடையாக இருப்பதாய் நகுலன் சலித்துக்கொண்டார்.
சிறுஅச்சாணி மிகப்பெரிய உருள்பெருந்தேரின் ஓட்டத்திற்குக்காரணமாய் அமைவதைப்போல் அவர் செதுக்கியச் சிறுசொற்றொடர்கள் பலநூறு பக்கத் தத்துவங்களாய் நீள்வன.
“அவன் அதிகமாய்ப் பேசமாட்டான்
ஏனென்றால்
தான் பேசினால் எங்கேயாவது
அகப்பட்டுக் கொண்டுவிட்டாலோ
என்ற ஒரு எச்சரிக்கையான வாழ்வு“
அவர் உதிர்த்த சொற்கள் பலமாய் தாக்குகின்றன இன்றும் பலரை.வாய்பேச வாய்ப்பிருந்தும் நமக்கேன் வம்பென்று கருத்துச் சொல்லக்கூட மறுக்கும் பலரது மனசாட்சியாய் நகுலன் உலுக்கிப் பார்க்கிறார்.
இந்தியத்தத்துவவியலின் மாயாவாதத்தை நகுலனின் கவிதைகளில் காணலாம். “காண்பதெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ“என்ற மகாகவி பாரதியைப் போல் நகுலன் வாழ்தல் ,மறைதல் நிகழ்வுகளைத் தத்துவார்த்தமாய் அணுகுகிறார்.
“இருப்பதெற்கென்றுதான்
வருகிறோம்
இல்லாமல்
போகிறோம்“
எனும் வரிகளின் வீச்சு வாசகனின் கன்னத்தில் அறைகிறது.பாரதியின் காண்பது, மறைவது சொற்கள் போல் நகுலனின் இருப்பது,மறைவது என்ற சொற்கள் நிலையாமையை நிலையானதாய் காட்டுகிறது.இந்தக் கவிதை மௌனியின் கதைகளை நினைவுபடுத்துகிறது.மெய்ப்பொருள் காணும் முயற்சியில் நகுலன் கவிதைகள் வாசகனை ஈடுபடவைக்கின்றன.
நகுலனின் முதுமை அவருக்கு வாழ்க்கை பற்றிய எதிர்க்கருத்தியலைத் தந்ததெனலாம்.அவர் கவிதைகள் தந்த நேரடிப் பொருளைவிடச் சொல்லாமல் சொல்லிச் சென்ற மெய்ம்மைகள் வாசகனின் பொருள்திசைகளை விரிக்கச் செய்தன.
சகமனிதர்கள் மீதான அக்கறை கொஞ்சம்கொஞ்சமாய் குறைந்துவரும் வேளையில் உலகியல் உண்மையை ராமச்சந்திரன் கவிதை மூலம் அதிர்ச்சியோடு காட்டுகிறார்.
“ராமச்சந்திரனா
என்று கேட்டேன்
ராமச்சந்திரன்
என்றார்
எந்த ராமச்சந்திரன்
என்று நான் கேட்கவில்லை
அவர் சொல்லவுமில்லை”
அன்றாட வாழ்வின் சிறுசம்பவத்தைக்கூடச் சமூகத்தைக் காட்டும் கண்ணாடியாக நகுலனால் மாற்றிக்காட்ட முடிகிறது.
எதற்கு மற்றவர்களோடு பேசுகிறோம் என்பதை அறியாத,இயந்தரத்தனமான உரையாடல்களை நாம் மேற்கொள்கிறோம் என்பதை நகுலன் இப்படிச் சொல்கிறார். தனிமை நகுலனின் கவிவேர்.
திண்ணைகள் தின்ற தெருக்கள்,அளிக்கம்பிகள் இல்லாக் கதவுகள்,தன்னைத்தானே பூட்டிக்கொண்டு சொந்தச் சிறையில் இருக்கும் விந்தைமனிதர்கள்,நீர்மோர் தராத சாவடிகள்,சிமென்ட் கடைகளாகிவிட்ட  சத்திரங்கள்,இவற்றுக்கு மத்தியில் ஊர்ந்து செல்கின்றது இக்கவிஞனின் கவிப்பாம்பு .
 பனங்கைப் பரண்கள்,கட்டை குத்தப்பட்ட காரைவீடுகள் யாவற்றையும் இழந்து காங்கிரிட் லாப்டுகளுக்கு மாறி வெகுநாளாகிவிட்டது.மனிதமும் மேலேறாமல் என்ன செய்யும்?
இறந்தகாலத்தின் இருளும் பழமையும் நகுலன் கவிதைகள்மீது போர்வை போர்த்தியதாக நான் நினைப்பதுண்டு.
நகுலன் கவிதைகள் கடல் மட்டத்தில் மிதந்துசெல்லும் கட்டையன்று,வாழ்க்கைக் கப்பலை நிலைநிறுத்தமுயன்ற ஆழ்கடல் நங்கூரம்.
அவர் எதையும் மௌனத்தால் மூடியதில்லை,கவிதையாகப் பேசியிருக்கிறார்.”தனியாக இருக்கத்தெரியாத ,இயலாத ஒருவனும் ஒரு எழுத்தாளனாக இருக்கமுடியாது”ஆம்.தனியாக நிற்கிறார் நகுலன் கவிதைவெளியிலும்..




இளையபாரதத்தின் இனிய முன்மாதிரி மகாகவி பாரதி ; முனைவர் சௌந்தர மகாதேவன்





பேராசிரியர் முனைவர் சௌந்தர மகாதேவன்,
தமிழ்த்துறைத்தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி) திருநெல்வேலி


சின்னச்சாமியார் பெற்ற ‘சினச்சாமி’ மகாகவிபாரதி இளையபாரதத்திற்கு நம்பிக்கை தரும் இனிய முன்மாதிரியாகத் திகழ்கிறார். இரவெல்லாம் இரைச்சலிடும் இராக்கோழி, பகல் வந்தவுடன் பயந்து பம்முகிறது.பம்முவதும் விம்முவதும் பாரதி விரும்பா இருண்மைச்சொற்கள்.

 பதினெட்டு வயது இளைஞனாய் காசியில் அத்தை குப்பம்மாள்,மாமா கிருஷ்ணசிவன் வீட்டில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தபோதே இளையோர் குறித்து பாரதிக்குத் தெளிவான பார்வை இருந்தது. இளைய சமுதாயம் வாழ்வின் எந்தச் சூறாவளி கண்டும் அஞ்சாமல்,நெஞ்சுரத்தோடும், தன்னம்பிக்கையோடு திகழவேண்டும், தேசமுன்னேற்றத்தில் ஈடுபடவேண்டும் என்று பாரதி விரும்பியதை ‘பாரதியார் சரித்திரம்’ எனும் நூலில் செல்லம்மாபாரதி தெளிவுபடுத்தியுள்ளார்; 

  “தேசத்தை முன்னுக்குக் கொண்டு வரவேண்டும்,அதற்கு எந்தத் தியாகமும் செய்ய ஒவ்வொரு வாலிபனும் தயாராகயிருக்க வேண்டும் என்பதுதான் அவருடைய நினைப்பு” என்றார்.

 “அச்சம் தவிர்” என்று பயத்திற்கே பயம்தந்தவன் பாரதி. “காலா,உனை நான் சிறுபுல்லென மதிக்கிறேன்-என்றன் காலருகே வாடா,சற்றே உனை மிதிக்கிறேன்” என்று துணிச்சலாய் அழைத்தது அவருடைய இருபத்தாறு வயதில்தான்.


சிந்துக்குத் தந்தையைச் சீண்டிய சிலபேர்


மறுப்பதற்கில்லை என்றாலும் ஏற்பதற்கில்லை என்ற மனநிலையோடுதான் எதிர்கொள்கிறோம் வாழ்வின் சில கணங்களை.பாரதி வாழ்வை அப்படிச் சலிப்போடு எதிர்கொண்டவனில்லை.

 ‘முடியாது என்ற சொல்லைச் சொல்ல முடியாது’ என வாழ்ந்த இளையபாரதியைச் சீண்டுவதற்கு எட்டயபுர அரண்மனையில் புலவர்கள் சிலர்,எட்டயபுர மன்னரை வைத்துக்கொண்டு,”பாரதி நீ தேசமுன்னேற்றக் கவிதைகள் படைத்திருக்கிறாய்..ஆனால், பாமரரும் ரசிக்கும்படி அண்ணாமலை ரெட்டியாரைப்போல் எளிமையான சிந்து வகையில் உன்னால் பாடல் எழுதுவது இயலாத காரியம்” என்று சொல்ல, எட்டயபுர மன்னரும் அதை ஆமோதித்து, “அண்ணாமலை ரெட்டியாரைப்போல் இசைக்கவிதைகள் படைக்க இனி ஒரு புலவன் பிறந்துவரவேண்டும்” என்று ஆமோதிக்க பாரதி சப்தமாய் சிரித்தார்.

சபையிலிருந்தவர்கள் “பாரதி..!சிரித்துப் பயனில்லை, உன்னால் முடிந்தால் அவரைப் போன்ற கவிதைகள் படைத்துவா பார்ப்போம்” என்று இளக்காரமாய் கிண்டலடிக்க, ஏதும் சொல்லாது வெளியே விடுவிடுவென்று நடந்த பாரதி,அன்றே காவடிச்சிந்துப் பாடல்களை இயற்றிவந்து மன்னரிடம் பாடிக்காட்டிப் பிரமிக்கவைத்தார். 1904 இல்”பச்சைத் திருமயில் வீரன்” என்ற தலைப்பில் சிந்துப்பாடல் பாரதியார் கவிதைகளில் அவர் தன்னம்பிக்கையின் சான்றாய் இடம்பெற்றுள்ளது. 

பின்நாளில் சிந்துக்குத் தந்தை எனும் பெயர் கிடைக்குமளவு இளையபாரதி, சொற்களைக் குழைத்துச் சுந்தரக்கவிதைகள் படைத்தார்.” வலிமையே வாழ்க்கை என்பதை நன்குணர்ந்த மாகவிஞன்,தன் சுயத்தை நிருபிக்கும் வாய்ப்பாகவே தனக்குமுன்பிருந்த சவால்களைப் பயன்படுத்தினார். பாரதியின் இந்தப் போர்க்குணமே  மிகப்பெரிய தன்னம்பிக்கையாளானாய்,மகா கவியாக, தமிழ்கூறு நல்லுலகத்தின் முன், சாதனையாளானாய் முன்னிறுத்தியது.தன்னைக் குறைத்துப்பேச பாரதியார் யாரையும் அனுமதிக்கவில்லை. எடுத்த காரியம் யாவினும் வெற்றி என்றும், தன்னால் எதுவும்முடியும் என்றும் தன்வாழ்நாள் முழுக்க நிருபித்துக்கொண்டே இருந்தார்.



பெரிதினும் பெரிது கேள்


எட்டயபுர அரண்மைனையில் தினமும் மன்னருக்குப் பத்திரிகைகள் வாசிப்பது, நூல்கள் வாசித்து விளக்கம் சொல்வது,நாட்டுநடப்புகளை விளக்குவது என்பன போன்ற எளியபணிகளைத் தொடக்கத்தில் செய்த பாரதிக்கு அப்பணிகள் சற்றும் பிடிக்கவில்லை. “திருவினை வென்றுவாழ்” என்று சாதிக்கத் துடித்தவன் சம்பளமதில்சுவர்களுக்குள் மாட்டிக்கொண்டு சங்கடப்படுவானா? ‘அரைக் காசானாலும் அரசாங்கக்காசு’ என்ற வழக்கமான சிந்தனை, பாரதிக்குப் பிடிக்கவில்லை. 

மனத்திற்குப் பிடித்தமில்லாத வேலையைத் தொடரமனம் ஒப்பவில்லை.வெறுப்பில் அரண்மனைப்பணியை விட்டுவிலகினான். அடுத்து ஆசிரியப்பணியில்..22 வயது இளைய ஆசிரியராய் மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் 1-8-1904 முதல் 10-11-1904 வரை பணியாற்றிய பாரதி, சுகவாழ்க்கை எனும் சூத்திரத்திற்குள் அடங்காத கங்கையாகவே கரைபுரண்டு பிரவாகமாய் ஓடினார்.

 “நொந்தது சாகும்” என்று உற்சாகமாய் சொன்ன மகாகவிபாரதி,ஆசிரியத்தொழிலில் இருந்துகொண்டு தேசத்தின் அரசியல் மாற்றத்திற்குப் போராடுவதில் பயனில்லை என்று அந்தவேலையையும்  உதறிவிட்டு சென்னை சென்று,சுதேசமித்திரன் இதழில் உதவியாசிரியராய் பணிக்குச் சேர்ந்தார். விழிக்கும் வரைக்கும் விடியல் வெளியே நிற்கிறது. விழிகள் திறந்தால் இருள் எங்கோ தொலைகிறது. இலக்குகள் அதிஉன்னதமாய் அமையும்போது அதை அடைவதற்கான பாதையும் கரடுமுராடாகத்தான் இருக்கும் என்பதைப் பாரதி நன்றாக உணர்ந்திருந்தான்.

சொந்தச் சிறைக்குள் தன்னைப் பூட்டிக்கொண்டுத் தன்னை நொந்துகொள்ளாத வல்லமை மிக்கவன் மகாகவி பாரதி.  எந்தப் புதுமையையும் ஏற்றுக்கொள்ளும்  வகையில் மனதைத் தயாராக மாற்றி வைத்திருந்ததால் பாரதியால் சொல்வதைத் தெளிந்துசொல்லி, செய்வதைத் துணிந்து செய்ய முடிந்தது.



மைஇருளை வெளுத்த மாகதிரோன் பாரதி



சுவாமி விவேகானந்தரின் சிஷ்யையாக விளங்கிய சகோதரி நிவேதிதா,பாரதியின் உள்ளுக்குள் ஒளிந்திருந்த அக்கினிக்குஞ்சைச் சொற்களால் கூர்தீட்டிச் சாதனைவானில் சிறகடிக்க வைத்தவர். 1905 இல் பாரதி,சகோதரி நிவேதிதாவைச் சந்தித்தான்.

 “பாரதத் தாய் உன் கண் எதிரே கையில் விலங்கோடு நிற்க, நீ உடைத்தெரியாமல் நிற்கலாமா பாரதி!” என்று சினத்தோடு வினவ 23 வயதேயான இளையபாரதி சிலிர்த்தெழுந்தான்.”சொல்லுக்கடங்காவே பராசக்தி, சூரத்தனங்களெல்லாம் வல்லமை தந்திடுவாள் பராசக்தி வாழியென்றே துதிப்போம்”என்று தேசம் காக்கத் தெய்வத்திடம் பாரதி வல்லமை வேண்டிய பாரதிக்கு சகோதரி நிவேதிதா மகத்தான சக்தியாகப் புலப்பட்டார்.பிரகாசமான முகத்தோடு உறுதியோடு பேசிய சகோதரி நிவேதிதாவிடம் பேசியபின் பாரதியின் தன்னம்பிக்கை இன்னும் கூடியது.சகோதரி நிவேதிதாவைச் சந்தித்து உபதேசம் பெற்ற நிகழ்வையும், அவரிடம் பெற்ற ஞானதீட்சையைத் தன் இறுதிக்காலம் வரையிலும் சக்தியாய் பாரதி மனதில் தேக்கிவைத்திருந்தார்.



புதிய ஆத்திசூடியில் இளையபாரதி



பாரதியின் புதியஆத்திசூடியில் இளையபாரதியின் தன்னம்பிக்கையைத் தெளிவாய்காணமுடியும்.”எண்ணுவதுயர்வு, ஓய்தலொழி, கீழோர்க்கஞ்சேல், கேட்டிலும் துணிந்துநில், சிதையா நெஞ்சுகொள், தாழ்ந்து நடவேல், துன்ப மறந்திரு, தோல்வியிற் கலங்கேல், கெடுப்பது சோர்வு, புதியன விரும்பு, மானம் போற்று, ரௌத்திரம் பழகு, வையத் தலைமை கொள்” என்று இளையோருக்குத் தன்னம்பிக்கைப் பொன்மொழிகளைத் தந்தவன் தன்நம்பிக்கை பாரதி.


மகாத்மாவைக் கவர்ந்த மகாகவி பாரதி


சிறுவயதிலிருந்தே பாரதி யாருக்கும் அஞ்சியதாய் சரித்திரமில்லை.1919 ஆம் ஆண்டு பிப்ரவரியில் ரௌலட் சட்டத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்தவதற்கான ஆயத்தக் கூட்டத்திற்கு மகாத்மாகாந்திஜி சென்னை வந்திருந்தார்.அவர் ராஜாஜியின் வீட்டில் தங்கியிருந்த அந்த நாளின் மதிய வேளையில், வாசலில் பாதுகாப்புக்கு நின்றவர்களைச் சற்றும் சட்டை செய்யாமல்,யாருடைய அனுமதியையும் வேண்டாமல், பாரதி விடுவிடுவென உள்ளே நுழைந்தான்.மகாத்மா காந்திக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு அவர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த மெத்தையில் அமர்ந்தான்.

 “மிஸ்டர் காந்தி! இன்றைக்குச் சாயங்காலம் ஐந்தரைமணிக்கு நான் திருவல்லிக்கேணிக் கடற்கரையில் ஒரு கூட்டத்தில் பேசப்போகிறேன் அந்தக் கூட்டத்துக்குத் தாங்கள் தலைமை வகிக்க முடியுமா?” என்று கம்பீரமாய் கேட்டான்.உடன் காந்திஜி தன் உதவியாளர் மகாதேவ தேசாயிடம் “இன்று மாலை நமது அலுவல்கள் என்ன?” என்று கேட்க,”இன்று மாலை வேறு இடத்தில் இருக்கவேண்டும் பாபுஜி” என்று பதிலளித்தார்  மகாதேவ தேசாய்.

உடன் மகாத்மா,பாரதியிடம் “விழாவை நாளைக்கு வைத்துக்கொள்ளலாமா?” என்று கேட்கிறார். “ முடியாது, நான் போய்வருகிறேன்,மிஸ்டர் காந்தி! தாங்கள் ஆரம்பிக்கப் போகும் இயக்கத்தை நான் ஆசீர்வதிக்கிறேன்.” என்று சொல்லிவிட்டுப் பாரதியார் அந்த இடத்தைவிட்டுப் போய்விட்டார்.

 பாரதியின் தன்னம்பிக்கை மகாத்மாவைப் பெரிதும் ஈர்த்தது. அவர் போனபின், “இவர் யார்?” என்று ராஜாஜியிடம் காந்தி கேட்க, “அவர் எங்கள் தமிழ்நாட்டுக் கவி” என்றார்.

 “இவரைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும்.இதற்குத் தமிழ்நாட்டில் ஒருவரும் இல்லையா?” என்று மகாத்மா கேட்க, ‘ஒருவரும் பதில் சொல்லவில்லை’ என்று அந்தச் சம்பவத்தை அருகிலிருந்து பார்த்த வா.ரா.என்கிற பாரதியாரின் நண்பர் “மகாகவி பாரதியார்” எனும் நூலில் பதிவுசெய்துள்ளார்.அந்தச் சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகளுக்குள்( 1921) பாரதி என்ற தமிழ்க்கருவூலத்தை நாம் இழந்தோம்.

.காந்தி சொன்னதுபோல் பார்த்துக்கொள்ள யாரும் இல்லாததால். பார்த்துக்கொண்டிருந்தால் இன்னும் இறவாக் காவியங்களை இளையபாரதி இறவாமல் தந்திருப்பான்.


*கட்டுரையாளர் பாரதப் பிரதமரிடம் தேசியவிருது பெற்றவர்.










காலம் எழுதிய கம்பீரஎழுத்து: சி.சு.செல்லப்பா ;பேராசிரியர் முனைவர் சௌந்தர மகாதேவன்,




           
பேராசிரியர் முனைவர் சௌந்தர மகாதேவன்,
தமிழ்த்துறைத்தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி(தன்னாட்சி),
ரஹ்மத் நகர்,திருநெல்வேலி
9952140275
எல்லோரும் எழுதுகிறார்களே நாம் எழுதினால்என்ன என்ற எண்ணம் தோன்றியதோ என்னவோ..சின்னமானூர் சுப்ரமணியம் செல்லப்பா என்கிற உயிரெழுத்தை உரிமையோடு எழுதிப்பார்த்தான் காலம் எனும் கம்பீர எழுத்தாளன். தேனி மாவட்டம் சின்னமனூர் அருகேயுள்ள வாடிப்பட்டியில் 1912 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 இல் பிறந்து, வத்தலகுண்டு அக்ரஹாரத்தின் கோவில்தெருவில் வசித்த சி.சு.செல்லப்பா, பின்னர்  சென்னைக்கு இடம்பெயர்ந்தார். எழுத்தையே வாழ்க்கையாகவும், வாழ்வையே எழுத்தாகவும் கொண்டுவாழ்ந்தவர். ஜீவனாம்சம், சுதந்திரதாகம் என்பன அவர் எழுதிய அருமையான நாவல்கள். வாடிவாசல் அவரது குறுநாவல். தன் தந்தையைக் கொன்ற காளையை அடக்கிய மகனின் கதையை வாடிவாசல் கதையில் உணர்ச்சிப் பெருக்கோடு சி.சு.செல்லப்பா எழுதியுள்ளார். சி.சு.செல்லப்பாவிடம் ஐம்பதுகளிலேயே அருமையான நிழற்படக்கருவி இருந்தது.  அலங்காநல்லூர் போய் காளை அடக்குவதைப் படமெடுத்து வைத்திருந்தார். சுதந்திரச்சங்கு இதழில் எழுதத்தொடங்கினாலும் மணிக்கொடி இதழில் எழுதிய பின்னரே இவர் எழுத்துகள் கவனம் பெற்றன.மனதில் காந்தியத்தை ஏந்திக் நீர்க்காவியேறிய கதர்வேட்டியோடும் காடாத்துணியில் தைத்த கையில்லாப் பனியனோடும் “எழுத்து” பிரசுரநூல்களைத்  தலையில் சுமந்துகொண்டு  ஒவ்வொரு கல்லூரித் தமிழ்த் துறையாகத் ஏறிஇறங்கிய உத்தமர். இப்படியும் ஒருமனிதரை இந்தக் காலத்தில் பார்க்கமுடியுமா? என்று நினைக்கும்படியாக வாழ்ந்தவர்.தன் இறுதிவினாடிவரை எழுதுவதில் சலிப்போ அவநம்பிக்கையோ அவருக்கு ஏற்படவில்லை.சரசாவின் பொம்மையும் மணல்வீடும் எல்லோராலும் பாராட்டப்பட்டபோது புன்னகையை மட்டுமே பதிலாகத் தந்தவர். படைப்பாளராய் இருப்பவர் மற்றவர் படைப்புகளைப் படித்துத் தவறாது விமர்சிக்கவும் வேண்டும் என்பது சி.சு.செல்லப்பாவின் கருத்தியல். தரமான திறனாய்வுகளை வெளியிடுவதற்கென்று அவர் தொடங்கிய எழுத்து இதழ் தமிழுக்குக் கிடைத்த காலக்கொடை. 1959 ஜனவரியில் எழுத்து இதழைத் தொடங்கினார். மக்களுக்குப் பிடித்தவற்றைத் தந்துகொண்டிருத்த தமிழ்இதழ்களுக்கு மத்தியில் ‘இப்படித்தான் தரமாகத் தருவேன்’ என்று இலட்சியநோக்கோடு எழுத்து இதழைத் தொடர்ந்து ஒன்பதேகாலாண்டுகள் நடத்தினார். 1968 ஆம் ஆண்டில் 112 வது இதழோடு ‘எழுத்து’ காலாண்டிதழாக மாறியது.எழுத்து தோன்றி பன்னிரெண்டாம் (1970 ) ஆண்டில் 119 ஆவது இதழோடு எழுத்து நின்றுபோனது. “ஜீவனாம்சம்” கதையைச் சோதனை முயற்சியிலான கதையை ‘எழுத்து’ இதழில் எழுதினார்.புதுக்கவிதை வளர்ச்சிக்கு எழுத்து ஆற்றியபணி போற்றத்தக்கது. சி.மணியும், வைதீஸ்வரனும், பிச்சமூர்த்தியும் எழுத்தின் கழுத்தில் புதுக்கவிதை மாலைபோட்டு அழகை ஆராதிக்க செல்லப்பா காரணமாய் அமைந்தார். எழுத்து இதழின் திறனாய்வுக் கட்டுரைகள் நடுநிலையோடு அமைந்தன.முதல் இதழிலிருந்தே க.நா.சு., சிறுகதைகள் குறித்த திறனாய்வுக் கட்டுரைகள் எழுதினார்.புதுமைப்பித்தன் ,கு.ப.ரா நினைவுமலர்கள், ந.பிச்சமூர்த்தி,பி.எஸ்.ராமையா சிறப்பு மலர்களை வெளியிட்டார். சி.சு.செல்லப்பா ஓர் இலக்கிய இயக்கம்,தரமான எழுத்தைத்தந்த திறமான இலக்கியப் பிதாமகன். நவீனப் படைப்பிலக்கியத்தின் காலக்குறியீடு. எழுத்து இதழைத் தொடங்கியபோது தமிழ்நாட்டில் தீவிரமான இலக்கிய இயக்கத்தை இரண்டாயிரம்பேராவது ஆதரிப்பார்கள் என்று எண்ணித் தொடங்கினார்..ஆதரவுகுறித்து அவருக்குக் கவலையில்லை..தரமான இதழைப் பன்னிருஆண்டுகள் தந்த பெருமை அவருக்கு உண்டு.வாசிப்பை நேசித்த உத்தமக் கலைஞானியாக,தமிழகம் முழுக்க எழுத்தை இயக்கமாக மாற்றிய இதழியலாளராக இருந்தார். மனம் வெறுத்துச் சலித்துக்கொண்டதோ, தன்னை நொந்துகொண்டதோ இல்லை. “நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்” என்று சொன்ன அப்பர்பெருமானின் கம்பீரம் சி.சு.செல்லப்பாவிடம் இருந்தது. தரமான தன் எழுத்துகள் காலம் கடந்தும் நிற்கும் என்ற உறுதிஅவரிடம் இறுதிவரை இருந்தது. ஏற்கனவே யாரோ போட்டுவைத்த பாதையில் கால்நோகாமல் பயணப்படாமல் புதியபாதை போட்டார் என்பதால் அவர் கால்கள் ரணப்பட்டன. ஆனாலும் அவர்பயணப்படப் பயப்படவில்லை. எல்லாப் பயணங்களும் எதோஒரு சோடிக்கால்களின் கொப்பளத்தில் தொடங்கி வரலாறாய் உருப்பெற்றிருக்கின்றன. தன் இறுதிக்காலத்தில் 1800 பக்க நாவலைச் சொந்தவெளியீடாக வெளியிட்டார்.அந்தத் துணிச்சல் அவருக்கு மட்டுமே உண்டு.