உளியின் மொழியில் கற்கவிதைகள்.
...................................................................................
முனைவர் சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி
9952140275.
mahabarathi1974@gmail.com
திருநெல்வேலி,கிருஷ்ணாபுரம் ஸ்ரீ வேங்கடாஜலபதி
திருக்கோவில் சிற்பங்கள்
..........................................................................................................................................................................
சில நிமிடங்கள் சிலிர்க்கும் நிமிடங்களாய்
அமைந்து விடுகின்றன
வண்ணத்துப்பூச்சி வாசல் தொட்டிச்செடியில் அமரும்
அழகுவினாடியைபோல்.திருச்செந்தூர் செல்லும்போதெல்லாம் ஸ்ரீராம் பாப்புலர் பேருந்து
கிருஷ்ணாபுரம் கோவில் ஆர்ச் தாண்டி நிற்பதும்,ஒவ்வொரு முறையும் உள்ளேபோய்
உலகப்புகழ்மிக்க சிற்பங்களைப் பார்த்துவிடவேண்டும் என்று மனம் நினைப்பதும்,அந்த
வினாடியோடு மறந்துபோவதும் வழக்கமான நிகழ்வுகள்.
கோடை விடுமுறைக்காகக் கல்லூரி
விடுமுறை விடப்பட்ட அந்த தளர்வான நாளின் மாலை வேளையில் என் குழந்தைகளுடன்
கிருஷ்ணாபுரத்திலிருந்தேன்.
மிகப் பரந்த வளாகம்.பாளையங்கோட்டையிலிருந்து 12
கிலோமீட்டர் தொலைவில் திருநெல்வேலி திருச்செந்தூர் நெடுஞ்சாலை ஓரத்தில் கம்பீரமாய்
வீற்றிருக்கிறது வெங்கடாசலபதி திருக்கோவில்.
கொடிமரம் தாண்டி உள்நுழைகிறேன்..
உளியின்
மொழியில் எழுதப்பட்ட கற் கவிதைகள்.
காலம்கடந்தும் நம் காதோடு வரலாறு
பேசிக்கொண்டிருகின்றன.
குழந்தைகளோடு சிற்பங்கள் பார்ப்பதற்குக் கொடுத்துவைத்திருக்க
வேண்டும்.சோட்டா பீம் பார்த்தே பழக்கப்பட்ட அச் சிறுவர்கள் அங்கு அர்ஜுனனையும்
கர்ணனையும் கூர்மையான தாடியோடு நிற்கும் உயிர் சிற்பங்களையும் கண்டு
மகிழ்ந்தனர்.
எத்தனையோ ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் உயிர்த்துடிப்போடு
செதுக்கப்பட்ட அந்தச் சிற்பங்களின் அழகை கூகிள் தேடுபொறிகளில்
தேடித்தெரிந்துகொண்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தேடிவந்து கொண்டிருக்க நாம்
சர்க்கரைப்பொங்கல் தின்று அச் சிற்பங்கள் மீது பூசிக்கொண்டிருக்கிறோம் என்பது
கொடுமையானதில்லையா ?
பிரெஞ்சு தாடி என்று சொல்கிறோமே அதைப்போன்ற
வேறுபட்ட தாடியோடுடன் கூடிய சிற்பத்தைக் கண்டு என் மகன்கள் மகிழ்ச்சி
அடைந்தனர்.
தமிழ்நாட்டில் வேறுஎந்தக் கோவிலிலும் பார்க்க இயலாத அந்தச் சிற்பம்
முகஅமைப்பில் வேற்பட்டதாய் இருக்கிறது .
.சீனமுகச் சாயலில் ஒரு
சிற்பம்,அரசகுமாரியைத் தூக்கிச் செல்லும் இளைஞன் சிற்பத்தில் தத்ரூபம்..
பதினாறாம்
நூற்றாண்டுச் சிற்பங்கள் அவை.
இந்தக் கோவிலின் வீரப்பநாயக்கர்
மண்டபம்,கோவிலின் அரங்கமண்டபம் ஆகிய மண்டபங்களில் ஆறடி உயரத்திலமைந்த அருமையான
முப்பதிற்கும் மேற்பட்ட அழகுச் சிற்பங்கள்..
ஒரே தூணில் நான்கு திசைகளிலும் அழகான
சிற்பங்கள்.குறத்தி அரசகுமாரனைக் கடத்தும் சிற்பம் மனதை மயக்குகிறது.
மகாபாரதப்
பாத்திரங்களான அர்ஜுனனையும் கர்ணனையும் கண்ணெதிரே காண முடிகிறது.இளவரசியைக்
கடத்தும் இளம்வீரன் மீசையும்,நாயக்கமன்னர்களின் வளைத்த கொண்டையும் காலக்குறியீடாய்
கல்லில் பதிந்துகிடக்கின்றன.
உடைவாள்,காலில் கழல்,கூர்மையான மூக்கு ஆகியன
சிற்பியின் ஆளுமைக்குச் சான்றாக அமைகின்றன.
குறத்தி ராஜகுமாரனைக் கடத்தும் சிற்பத்தில்
நளினம் தெரிகிறது.
பெண்ணின் வலிமையின்முன் சிறுதுரும்பாய் ராஜகுமாரனை அச்சிற்பி
படைத்துக் காட்டுகிறார்.
அர்ஜுனனின் தவக்கோலச் சிற்பம் அக்காலத்திற்கு நமை
இட்டுச்செல்கிறது.
வளைந்து நெளிந்து கர்ணனின் மீசை வீரம் காட்டுகிறது.மூக்கின்
கூர்மையும் கண்களின் கூர்மையும் நமை வியக்க வைக்கிறது.
முகத்திற்கு முகம் மீசை
அமைப்பு மாறுவது சிறப்பு.மன்மதனும் ரதியும் எதிரெதிரே கல்லிலும் காதல் மொழி
பேசிக்கொண்டிருகின்றனர்.
மன்மதன் கரும்புவில்லின் மேற்பகுதியில் உள்ள சிறுதுளையில்
ஊசியைப் போட்டால் அக்கரும்புவில்லின் கீழ்ப்பகுதியில் உள்ள சிறுதுளையில்
எடுத்துவிடலாம்..அந்த அளவு நுண்கலை சிறந்து நிற்கிறது.
ஓவியர் சில்பி ,கிருஷ்ணபுரச்சிற்பங்களில் மனம்
மயங்கி வரைந்த ஓவியங்கள் விகடன் வெளியிட்டுள்ள தென்னாட்டுச் செல்வங்கள் எனும்
ஓவியத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
திக்கெலாம் புகழுறும் திருநெல்வேலி என்று
திருஞானசம்பந்தர் போற்றிப்பாடிய திருநெல்வேலி கிருஷ்ணாபுரம் திருவேங்கடநாதர் திருக்கோவில்
கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற உள்ளது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆலயங்களின்
சிற்பங்களைப் பாதுகாத்து அடுத்ததலைமுறைக்குத் தரும் நற்பணியைச் செய்ய வேண்டும்.
படங்கள்,கட்டுரை: முனைவர் சௌந்தர
மகாதேவன்,திருநெல்வேலி

